Image

http://www.pustaka.co.in

கண்ணே உந்தன் நிழலாவேன்!

Kanne Undhan Nizhalavean!

Author:

உமா பாலகுமார்

Uma Balakumar

For more books

http://www.pustaka.co.in/home/author/uma-balakumar

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

1

ந்த ஏகாந்த இரவில்... பெளர்ணமி ஒளிச் சாரலில், உலகே மஞ்சள் உடை உடுத்திய தேவதையாய் காட்சியளித்தது!

ஒவ்வொரு மலரையும் ஒரு நேசக் கவிதையாய் உதிர்த்து, பூமிக்குத் தூதனுப்பிக் கொண்டிருந்தன... குல்மொஹர் மரங்கள்!

அந்த ரயில் நிலையத்தில் இன்னும் சற்று நேரத்தில் புறப்படத் தயாராக நின்றிருந்த அந்த ரயிலில் ஏறி அமர்ந்தாள் சம்வர்த்தினி.

"ஜாக்கிரதைடி! ஊருக்குப் போய் சேர்ந்தவுடனே எனக்கு போன் பண்ணு!"

ஜன்னல் வழியே அவள் கையைப் பிடித்தபடி மீரா கூற, பெட்டியையும், ஏர் பேகையும் சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு அவளிடம் விடைபெற்றுக் கீழே இறங்கினார் மீராவின் தந்தை சபாபதி.

'சரிடி...! உனக்கும் அங்கிளுக்கும் ஒரு வாரமா ரொம்பத் தொல்லை குடுத்திட்டேன்... அங்கிள் இல்லேன்னா எனக்கு இந்த வேலையே கிடைச்சிருக்காது! ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்!"

அவள் குரலில் கசிந்த நன்றியுணர்வு, சபாபதியை பெரிதும் நெகிழச் செய்வதாய்!

"எனக்கு நீயும் மீராவும் ஒண்ணுதாம்மா வர்த்தினி... இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்! அங்கே உனக்கு வேலை பிடிக்கலைன்னா எப்ப வேணாலும் எங்க வீட்டுக்கு நீ திரும்பி வரலாம்!"

வாஞ்சையுடன் உரைத்தவரிடம், சிறு கலக்கத்துடன் விடைபெறும்போதே, ரயில் நகரத் துவங்கியது.

மீரா சிறிதும் தூரம் அவள் கையைப் பிடித்தபடியே ஓடி வர, நட்பின் உன்னதம் அந்த நேரம் புரிவதாய்!

"என்னுடைய தாய், மனதிற்குப் பிடித்த வேலை, உயிராய் வளர்த்த மாமா அனைவரையும் விட்டு விட்டு இப்படி எங்கோ அநாதையாகச் செல்கிறேனே" வென்ற தவிப்பும் வேதனையும் அவளை வெகுவாய் ஆட் படுத்தின.

மெதுவாகப் பின்புறம் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் அவள். ரயிலின் வேகத்திற்கு எதிர் மாறாய்க் கடந்து செல்லும் இயற்கைக் காட்சியாய், நினைவுகள் பின் நோக்கிப் பயணிக்கத் துவங்கின.

***

"வர்த்தினிம்மா! இன்னிக்கு ஹாஸ்பிடலுக்கு சீக்கிரம் போகணும்னியே எழுந்திரிக்கலையாடா?"

அம்மா சுகந்தியின் குரல் மயிலிறகாய் இன்னும் செவி மடலை வருடுவது போல்!

மெதுவாக விழித்தவளின் முன்னால், நெற்றியில் சிறு கீற்று விபூதியுடன் தேஜஸ் மிளிர நின்ற தாயின் உருவம்!

"ம்... மாமா ஏதும் போன் பண்ணினாங்களாம்மா?" கேட்டபடி எழுந்து அமர்ந்தாள் வர்த்தினி!"

"இல்லைடா! நீ சரியான நேரத்துக்கு வந்திடுவேன்னு தான் அண்ணனுக்குத் தெரியுமே! அதான் பண்ணலைன்னு நினைக்கிறேன்..."

"சரிம்மா! நீங்க எப்போ ஸ்கூலுக்குப் போகணும்?"

"எனக்கு எப்பவும் போல ஒன்பது மணிக்குத்தான்... இன்னிக்கு என்ன பங்ஷன்மா?"

"என்னம்மா... மறந்துட்டீங்களா? மாமா ஹாஸ்பிடல் ஆரம்பிச்சி பதினேழு வருஷம் முடியப் போகுதேம்மா! அதான்! இன்னிக்கு ஃபங்ஷன் இருக்கு!" என்றபடி தயாராகி மருத்துவமனைக்கு வந்தாள் அவள்.

சம்வர்த்தினி, பி.பி.ஏ. படித்து விட்டு ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் கோர்ஸும் படித்தவள்... இப்போது எம்.பி.ஏ. தபாலிலும் பயின்று வருகிறாள்!

அவளுடைய மாமா சுந்தர மகாலிங்கத்தின் மருத்துவ மனையில் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீசராகப் பணி புரிந்து வருகிறாள்.

மருத்துவமனைக்குச் சென்றவள், அங்கு நடக்கும் ஏற்பாடுகளைப் பார்வையிட்டு விட்டு முன்புறம் வந்தாள்.

"மேடம்! நீங்க வந்தவுடனே சீஃப் உங்களை வந்து பாக்கச் சொன்னாங்க!"

ரிசப்ஷனிஸ்ட் கூறியதும், இரண்டாவது ப்ளோருக்குச் சென்றபோது அவளுக்காகக் காத்திருந்தார் சுந்தர மகாலிங்கம்.

"வர்த்தினி! வா... வா! உனக்காகத்தான் காத்திட்டிருக்கேன்டா... எல்லாம் ரெடியா?" ஆர்வத்துடன் விசாரித்தார்.

"ம்... பாத்துட்டுதான் வரேன் அங்கிள்! நீங்க டிபன் சாப்பிட்டாச்சா?"

"இல்லைடா! உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன்... வா... ரெண்டு பேருமா சாப்பிடலாம்! நீ சீக்கிரம் வருவேன்னு தான் தெரியுமே... சேத்துதான் ஆர்டர் பண்ணியிருக்கேன்."

இருவரும் சாப்பிட்ட பிறகு அன்றைய விழாவிற்கான வேலைகள் தொடர், கேக் வெட்டி கோலாகலமாகக் கடந்த பதினேழு வருட இனிய வெற்றியைக் கொண்டாடி முடித்தனர்.

எப்போதும் போல், முதல் கேக் துண்டை அவளுக்கே மகாலிங்கம் ஊட்டிவிட, அவளுக்கோ பெரும் நெகிழ்ச்சியாய்!

வர்த்தினியின் சிறு வயதிலிருந்தே ஒரு பெறாத தந்தையாய்... பாசமிகு மாமாவாய் அவளை அன்புடன் வளர்த்தவர் அவர்!

இன்றுவரை அவளுடைய படிப்பு செலவையும் ஏற்று, அவளைத் தன் சொந்தப் பெண்ணாகவே பாதுகாப்பவர்!

அவள் தாய் சுகந்திக்கு தூரத்து உறவில் அண்ணன் முறையென்றாலும், தனக்கென்று யாருமே இல்லாததால், அவர்களையே தன் குடும்பமாக வரித்திருப்பவர் மகாலிங்கம்!

மருத்துவப் பணிக்காகத் தன்னையே அர்ப்பணித்து, திருமணமே செய்து கொள்ளாமல் இன்றும் தனிமையிலேயே வாழ்பவரை வர்த்தினி தன் தந்தைக்கும் மேல் நேசித்திருந்த தருணமது!

நினைவு தெரியாத சிறு வயதிலேயே தந்தை இறந்த பிறகு, ஒரு தந்தையாய், நண்பராய், பாதுகாவலராய் அவளுடைய உணர்வுகளைப் புரிந்து நடப்பவர் அவர்.

தனக்குப் பிறகு இந்த மருத்துவமனையை கவனிக்க, பொறுப்பேற்க அவள் ஒரு டாக்டராக வேண்டும் என்று அவர் விரும்பினார்.

ஆனால் அவளுக்கோ மருத்துவத் துறை எடுத்துப் படிக்க ஆர்வமில்லாததால், அவளுடைய விருப்பத்தை மதித்து தேர்ந்தெடுத்த துறையில் படிக்க அனுமதி வழங்கி, இன்று வரை அவளுக்கான எல்லாச் செலவுகளையும் ஏற்றும் வருகிறார்.

"என்ன வர்த்தினி! அப்படியே அமைதியா உக்காந்து யோசிச்சிட்டிருக்கீங்க?"

நர்ஸ் தேவகியின் குரல் அவளைக் கலைக்க நிமிர்ந்தால், தான் மாமாவைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்து, சுற்றுப்புறத்தை மறந்து நின்று விட்டது புரிவதாய்!

"ம்... ஏதேதோ பழைய ஞாபகங்கள் தேவகி!" என்றபடி விலகிச் சென்றவள், அன்று மாபெரும் இடியொன்று தனக்காகக் காத்திருப்பதை அறியவில்லை!

***

ரிசப்ஷன் அருகே போடப்பட்டிருந்த இருக்கையில் சாய்ந்து கண் மூடி யோசித்திருந்தவளைக் கண்ட வரதன் என்ற அந்த மனிதருக்கோ, யோசனையாய்!

தன் உறவினர் வீராச்சாமியின் மறு பதிப்பாய் உயரமாக, தீர்க்கமான அழகு முகத்துடன் அவள் தெரிய, உடனே சென்று அவளிடம் பேச வேண்டும் போல்!

ஆனால் மறுகணமே அவள் எழுந்து உள்ளே சென்று விட, தான் பார்க்க வந்த நோயாளியின் அறைக்கு யோசனையுடன் விரைந்தார் அவர்.

அன்று முழுவதும் மருத்துவமனையைத் தேனியாய் சுற்றி வந்தவள், வீட்டிற்குக் கிளம்பத் தயாராகியபோது, மகாலிங்கம் அவளை செல்லில் அழைத்தார்.

உடனே சென்று அவரிடம் மருத்துவமனை தொடர்பான சில விபரங்களைப் பேசி விட்டு வெளியே வரும் போதுதான், அந்த வரதன் அவளை வழி மறித்தார்.

சுந்தர மகாலிங்கத்தையும் அவளையும் ஒன்றாய் பார்த்தவருக்கோ, தாங்க முடியாத அதிர்ச்சியும், கோபமும்! இது எப்படி...?

வீராச்சாமி இறந்ததற்குப் பிறகு அவர் குடும்பத்தாருடன் தொடர்பின்றிப் போனது அவருக்கு ஞாபகம் வருவதாய்!

கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்கு மேல் ஆயிற்று... அவர் சுகந்தியைப் பார்த்து!

வீராச்சாமி இறந்த பிறகு கணவரின் சொந்த ஊருக்கே வராமல் எங்கோ சென்று விட்ட கனகத்தைப் பற்றியும், அவள் குழந்தையைப் பற்றியும் ஊரே மறந்து போயிருந்தது.

இன்று, தன் உறவினர் வீராச்சாமியின் மறு பதிப்பாய் பெண் உருவாய் அவளைக் கண்டதும் மகிழ்ந்தவர், அவளை சுந்தர மகாலிங்கத்தோடு கண்டதும் வெகுவாய் அதிர்ந்துதான் போனார்.

இந்த மனிதனுடன் வீராச்சாமியின் மகள் எப்படி... இவன் யாரென்று இந்தப் பெண்ணிற்குத் தெரியுமா... பதறித் துடித்தது இதயம்!

மறுகணமே அவளைத் தொடர்ந்தவர், பார்க்கிங் ஏரியாவில் அவளைக் கண்டு பிடித்துவிட்டார்.

தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்து உயிர்ப்பிக்க முயலும்போதுதான், ஒரு குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.

"ஒரு நிமிஷம்மா! நீ வீராச்சாமி அண்ணன் மகதானே?" அவர் கேட்டதும் வியப்புடன் திரும்பியவளுக்கு அவரின் அடுத்த கேள்வி பேரிடியாய்!

"எப்படிம்மா நீ இந்த டாக்டரோட... உங்கப்பாவைக் கொன்னவனோடவே நீ எப்படி... ரொம்ப அதிர்ச்சியா இருக்கும்மா!"

அவர் கூறியதும் அவளுடைய காலடியின் கீழ் பூமிபிளக்க, கையிலிருந்த பிடி நழுவி, ஸ்கூட்டி தரையில் சாய்ந்தது.

2

ர்த்தினியின் இதயம், புயலில் சிக்கிய பூவாய் தடதடத்தது.

"என்ன சொல்றீங்க... சார்?"

வார்த்தைகள் உயிர்ப்பின்றி வெளிவர, சிலையாய் சமைந்து நின்று விட்டாள் அவள்.

"ஏம்மா... உனக்குத் தெரியாதா? உங்கப்பா... வீராச்சாமி அண்ணன் சாவுக்கு காரணமானவனாச்சே அவன்!

"பெரிய டாக்டரா இருக்கலாம்... ஆனா அவன் செஞ்சது குத்தம்தானே! அவனால தானே இன்னிக்கு நீயும் உன் அம்மாவும் தனியா நிக்கறீங்க?"

அவருடைய வார்த்தைகள் முள்ளாய்த் தைத்தன... உடலில் சிறு நடுக்கம் ஓடியது.

"எங்கப்பாவை... அங்கிள்?" பேச மறுத்து தொண்டையிலேயே புதைந்தன வார்த்தைகள்.

எதையுமே நம்ப முடியாமல் உள்ளம் பதறித் தவித்தது.

"ஆமாம்மா! அந்த ஆளு ஒரு கிரிமினல்... சட்டத்தோட ஓட்டைங்களைப் பயன்படுத்தி உங்கப்பாவைக் கொன்ன கொலைக் குத்தத்திலிருந்து தப்பிச்சி அஞ்சே வருஷத்தில் ஜெயில்லேருந்து வந்திட்டதா அப்ப எல்லாரும் பேசிக்கிட்டாங்க...

"நானும் பேப்பர்லே படிச்சித்தான் தெரிஞ்சிக்கிட்டேன்... அப்புறம் பதினாலு வருஷம் கழிச்சி இப்பதான் நான் சென்னைக்கே வரேன்...

"என் மாப்பிள்ளைக்கு ஒரு ஆக்சிடெண்ட்... மல்ட் டிபுள் ஃப்ராக்சருன்னு சொல்றாங்க... இங்கதான் சேத்திருக்கோம்... நாளைக்கு ஆபரேஷன்...!

"என் பொண்ணுக்கு துணையா இருக்க வந்தப்பதான் உன்னையும் அந்த ஆளையும் பாத்தேன்... இப்ப வேணா அவரு சீஃப் டாக்டரா இருக்கலாம்! ஆனா நிஜத்துல அவன் ஒரு கொலைகாரன்தானே!

"சுகந்தி அண்ணியும் அண்ணனும் காதல் கல்யாணம் செஞ்சுக்கிட்டவங்க! அவங்களைப் பத்தி ஊரில் சிலர் தப்பாப் பேசினப்ப நான் நம்பலை!

"தன் கணவனைக் கொன்னவனோடவே சுகந்தி அண்ணி தொடர்பு வச்சிருக்கறதா அவனோடவே வாழறதா எல்லாரும் சொன்னாங்க...!

"ரெண்டு பேருக்கும் இருந்த தொடர்பை உங்கப்பா கண்டு பிடிச்சிட்டதாலேதான் அவரை இந்தாளு கொலையே செஞ்சாராம்!

"இப்ப உன்னை இந்த ஆளோட பாத்தப்புறம்... அதை நம்பாம இருக்கவும் முடியலை! உனக்கும் அம்மாவுக்கும் இந்த டாக்டர்தான் ஹெல்ப் பண்றாரா?"

வெறுப்பும் சினமுமாய் வினவியவரை அதிர்ச்சியும் வேதனையுமாக ஏறிட்டவள், மெதுவாக பதிலளித்தாள்.

"நீங்க சொன்னது உண்மையான்னு எனக்குத் தெரியாது... எங்கப்பா இறந்திட்டாங்கன்னு மட்டும் தெரியும்!

"ஆனா... அம்மாவும் மாமாவும்... ப்ச்... நான் நம்ப மாட்டேன்... ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்க! இனிமே என்னைத் தொந்தரவு செய்யாதீங்க! ப்ளீஸ்..."

சுள்ளென்று கூறிவிட்டு வேகமாக ஸ்கூட்டியைக் கிளப்பியவளுக்குள், பெரும் சஞ்சலமும் குழப்பமும்!

அன்றிலிருந்தே மனதில் குழப்ப மேகங்கள் மையம் கொள்ள, வீட்டிற்கு வந்த பிறகும் தன் தாயிடம் இயல்பாகப் பேசவே அவளால் முடியாது போயிற்று!

மருத்துவமனையில் மகாலிங்கத்திடம் இது தொடர், நெஞ்சமெங்கும் புதிய பாரம் ஆக்ரமித்திருக்க, தன் உணர்வுகளை மறைக்கப் படாத பாடுபட்டாள் வர்த்தினி!

மூன்று நாட்கள் கழித்து மீண்டும் ஒரு நாள் மதியம் அவளைத் தேடி வந்தார் அந்த வரதன்!

ரெஸ்ட் ரூமில் சாப்பிட்டு முடித்து விட்டு யோசனையுடன் அமர்ந்திருந்தவளை அவரின் அழைப்பு உசுப்பியது.

"சம்வர்த்தினி! நான் சொன்னதை நீ நம்பலை இல்லை? சம்வர்த்தினிங்கறது யார் பேரு தெரியுமா? உங்க பாட்டியோட பேரு...! உங்கப்பா வீராச்சாமியோட அம்மா பேரு... அவங்க தான் எனக்கு உறவு... "வேணும்னா அது உண்மையான்னு உங்கம்மா கிட்டே கேட்டுப் பாரு! அன்னிக்கு என்னை நீ நம்பலை இல்லை...

"இங்கே பாரு... எங்கப்பா எடுத்து வச்சிருந்த பேப்பர் கட்டிங்கை எல்லாம் தபால்லே வரவழைச்சிருக்கேன்... அது சொல்லும் எது உண்மை அப்படின்னு!"

ஒருவித வேகத்துடன் கூறிவிட்டு, தன் கையிலிருந்த பேப்பர்களை அவளுக்கு எதிரிலிருந்த மேஜை மேல் போட்டவர், வேகமாக அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

முதல் பக்கத்திலேயே வெளியாகியிருந்தது. அந்த திகில் செய்தி!

மேலே அவளுடைய தந்தை வீராச்சாமியின் புகைப்படமும் கீழே அவரைக் கொலை செய்த குற்றத்திற்காக சரணடைந்திருந்த சுந்தர மகாலிங்கத்தின் போட்டோவும் தெளிவாய்த் தெரிந்தன.

"எப்படி இது சாத்தியம்? ஏன் இதுவரை தன் தாயும், மாமாவும் இது பற்றித் தன்னிடம் ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை?"

தலை வெடித்து விடும்போல் தெறிக்க ஆரம்பிக்க, எல்லாப் பேப்பர்களையும் அள்ளியெடுத்துக் கொண்டு உடனே வீட்டிற்குக் கிளம்பினாள் அவள்.

ரிசப்ஷனிஸ்ட்டிடம் சென்று வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு, நேரே தன் தாயிடம் சென்றாள்.

மனம் முழுவதும் படபடப்பாய்... தன் தந்தையின் இறப்பை எண்ணி பெரும் சீற்றமாய் துடித்தது.

சுகந்தி வேலை செய்கின்ற பள்ளிக்கே சென்றவள், வெளியிலிருந்து செல்லில் அவரை அழைத்தாள்.

"அம்மா! நான்... உங்களோட பேசணும்! ஸ்கூல் வாசல்லே தான் வெயிட் பண்றேன். உடனே லீவு சொல்லிட்டு வர்றீங்களா?"

அவள் கேட்டதும் பதறிப் போனவர். "என்னடா? உடம்பு ஏதும் சரியில்லையா? இந்த நேரத்துல நீ வந்ததே இல்லையே? இரு... நான் உடனே வரேன்!" என்றபடி கிளம்பினார்.

ஆனால், வெளியே காத்திருந்த பெரும் பூகம்பத்தை... அது அவருடைய வாழ்க்கையைப் பெரும் அதிர்வுக்குள்ளாக்கப் போவதை அப்போது அவர் அறியவில்லை!

3

வாசலில் முகம் முழுவதும் சிவந்து ரௌத்ரமாய் நின்றிருந்த மகளை கண்டதும் ஒன்றும் புரியாமல் பில்லியனில் ஏறி அமர்ந்தார் சுகந்தி.

வீட்டிற்கு வந்து நுழைந்ததுமே தன் ஹேண்ட் பேகி லிருந்த பேப்பர்களை எல்லாம் எடுத்து டீப்பாயில் சிதற விட்டவள், கண்ணீருடன் தாயிடம் திரும்பினாள்.

"இதுக்கு என்னம்மா அர்த்தம்! எங்கப்பாவைக் கொலை செஞ்சது அங்கிளா? இதை ஏன் என் கிட்ட நீங்க சொல்லவே இல்லை?"

படபடவென்று பொரிந்தபடி தீக்கனலாய் கனன்றவளுக்கு பதில் கூற முடியாமல் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டார் அவர்.

"சொல்லுங்கம்மா.... இது உண்மைன்னா அங்கிள் அப்பாவைக் கொன்னவருன்னு தெரிஞ்சும் எப்படி உங்களால...?

"அப்போ அந்த மனுஷர் சொன்னது உண்மையா...? உங்களுக்கும்... மாமாவுக்கும்...?"

முடிக்க முடியாமல் அவள் திணறி நிறுத்த, "வர்த்தினி! தப்பாப் பேசாதடா! அம்மா சொல்றதைக் கேளுடா! உங்கப்பா சாவுக்கு மகாலிங்கம் அண்ணன்தான் காரணம்கிறது உண்மை! ஆனா எதுக்காகன்னு தெரியுமா?"

அவர் முடிக்கும் முன்பே இடைமறித்தாள் அவள். "போதும்மா! இதுக்கு மேல எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்! இனிமே என்னால் அவரை உறவா... ஏத்துக்க முடியாது...

"நீங்க வேணா உங்க கணவரைக் கொன்னவரை சுலபமா மன்னிக்கலாம்... என்னால முடியாது... இதுவரைக்கும் உங்களோட இருந்ததே பாவம்... நான் போறேன்! அவர் சாகடிச்சது எங்கப்பாவை... எதிர்காலத்தை...!

"தயவு செஞ்சு என்னைத் தேடாதீங்க! என்னைத் தொடர்ந்து வந்தீங்கன்னா, அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது! நான் உயிரோடவே இருக்க மாட்டேன்!"

கொதிப்பும் குமுறலுமாய்க் கூறிவிட்டு அவள் தன் அறைக்குள் சென்று படாரென்று கதவை மூட, அதிர்ச்சியில் அப்படியே மயங்கிச் சரிய ஆரம்பித்தார் சுகந்தி..

தன் உடைமைகள், பாஸ்புக், சர்டிபிகேட்ஸ், லைசென்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவள் வெளியே வந்தபோதும் அவர் எழுந்திருக்கவில்லை.

ஆனால் இது எதையுமே உணருகின்ற மனநிலையில் அவளும் இல்லை!

வேகமாக வீட்டை விட்டு வெளியேறியவளுக்கு ஒரு கணம் எங்கே செல்வதென்றே புரியவில்லை.

பிறகு, நெருங்கிய தோழி மீராவின் ஞாபகம் வர, உடனே ஒரு ஆட்டோவை நிறுத்தி அவளுடைய வீட்டிற்குச் சென்றாள்.

அந்த மதிய நேரத்தில், அவளுடைய அம்மா பார்வதி மட்டுமே வீட்டிலிருந்தார்.

அவருக்கும், வர்த்தினியைக் கண்டதும் அவள் அழுதிருந்த கோலமும், சூட்கேஸம் ஏர்பேகுமாக வந்து நின்ற நிலையும் எதையோ உணர்த்துவதாய்!

உடனே தன் கணவருக்கும் மகளுக்கும் போன் செய்து இருவரையுமே வரவழைத்து விட்டார்.

மீரா வந்ததும், அவளிடம் எல்லா உண்மைகளையும் கூறியவள் உடைந்து அழ ஆரம்பிக்க, அந்தக் குடும்பமே அவளைத் தேற்றியது.

பிறகு, அவளுடைய பிடிவாதத்திற்கு பயந்து அவளைத் தேடி அங்கு வந்த மகாலிங்கத்திடமும் வர்த்தினி இங்கு இல்லை என்று கூறி அனுப்பி வைத்தனர்.

ஒரு வாரத்தில் அவள் சிறிது தேறியதும், மீரா அவளிடம் மனம் விட்டுப் பேச ஆரம்பித்தாள்.

"வர்த்தினி! அம்மாவும் மாமாவும் என்னதான் சொல்றாங்கன்னு அவங்க பக்கத்து நியாயத்தையும் கேக்கலாமே... ப்ளீஸ்."

மெதுவாக இறைஞ்சியவளிடம், தீர்மானமாக மறுத்து விட்டாள் அவள்.

"நான் இங்கே இருக்கறது உனக்கு கஷ்டமா இருந்தா இப்பவே நான் போயிடறேன் மீரா! எனக்கு ஏதாவது உதவி செய்யணும்னு நினைச்சின்னா, ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணு...! அது போதும்!

"அதுவும் எங்கேயாவது வெளியூரிலே... கண்காணாத இடத்துலன்னா பரவாயில்லை!"

ஓய்ந்த குரலில் பிடிவாதத்துடன் அவள் முடிக்க, உடனே தன் தந்தையுடன் பேசினாள் மீரா.

நல்லவேளையாக அதே நேரத்தில் சபாபதியின் நண்பருடைய மகன் தன் தாயையும் வீட்டையும் பார்த்துக் கொண்டு உதவியாக இருக்க ஒரு பெண் தேவைப்படுவ தாகக் கேட்டிருந்ததாகத் தெரியவந்தது.